வற்புறுத்தி சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூருக்கு கேட்டரிங் வேலைக்கு சென்றபோது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை கட்டாயப்படுத்தி ராமநாதபுரத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து ராஜா சிறுமியை வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு ராஜாவுடன் சென்றுள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்தில் வைத்து ராஜாவுக்கும், சிறுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு வைத்தும் ராஜா அடித்து தாக்கியுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்துள்ளனர்.