சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகளை சென்னை மேயர் பிரியா ராஜன் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா ராஜன், பள்ளி மாணவர்கள் மட்டும் 20 வயது வரையிலான நபர்களுக்கு குடற்புழு காரணமாக வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் அனிமிகா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அவற்றைத் தடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 லட்சத்து 55 ஆயிரத்து 354 குழந்தைகளுக்கு ஒரே வாரத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் 20 முதல் 30 வயது வரையிலான பெண்கள் 4 லட்சத்து 12 ஆயிரத்து 480 நபர்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமுன் காப்போம் என்ற மருத்துவ முகாமை சென்னை மேயர் தொடங்கி வைத்தார்.
அதில் பல்துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள். அவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். பதவியேற்று ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ளது. எனவே கனவு திட்டம் உள்ளிட்ட விஷயங்களை வெளிப்படுத்துவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.