வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அணியார் காலனியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பகவதி தங்கம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து செல்வதற்காக பிரபு உள்ளிட்ட சிலர் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
அப்போது அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது பிரபு ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடன் வந்தவர்கள் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பிரபு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.