தமிழகத்தில் நிலை குழு தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் வார்டு தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் வரும் 30 மற்றும் 31-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வரும் மார்ச் 30ஆம் தேதி 21 மாநகராட்சிகளுக்கான வார்டு குழு தலைவர்களுக்கான தேர்தல் காலை 9.30 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் பகல் 2.30 மணிக்கு 21 மாநகராட்சிகளுக்கான நிலைக் குழு உறுப்பினர்கள், கணக்கு குழு உறுப்பினர்கள், பொது சுகாதார குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறும்.
இதை தொடர்ந்து மார்ச் 31-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு 138 நகராட்சிகள் மற்றும் 489பேரூராட்சிகளுக்கான வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நியமனக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும், 138 நகராட்சிகளுக்கான ஒப்பந்தக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும். மார்ச் 31-ம் தேதி பகல் 2.30 மணிக்கு, நிலைக்குழு தலைவர்களான, கணக்குகுழு தலைவர், பொது சுகாதார குழு தலைவர், கல்விக் குழு தலைவர், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர், நகரமைப்புக் குழு தலைவர் மற்றும் பணிகள் குழு தலைவர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறும். தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் சிசிடிவி பதிவு மற்றும் காவல்துறை பாதுகாப்போடு நடைபெறும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.