திண்டுக்கல்லில் போன் செய்து கொடுக்காத காரணத்தினால் தனது தங்கையை அக்கா வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நாககோனனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 43). இவரது கணவர் இறந்த நிலையில் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தமிழ்செல்வி உடன்பிறந்த அக்கா வெங்கடேஸ்வரி (வயது 46) தனது கணவர் சுப்பிரமணியனுடன் தனியாக வசித்து வருகிறார். ஈஸ்வரியின் மகன் நாக மணிகண்டன் கோயமுத்தூரில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சகோதரிகள் இருவரும் தாயாருடன் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு வெங்கடேஸ்வரி தனது தங்கை தமிழ் செல்வியிடம் மகன் நாக மணிகண்டனிடம் பேச போன் செய்து தருமாறு கூறியுள்ளார்.
தூக்க கலக்கத்தில்இருந்த தமிழ் செல்வி காலையில் போன் செய்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டு மீண்டும் துங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரி அரிவாள்மனையை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த தமிழ்செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த வெங்கடேஸ்வரி என் தங்கையை கொன்று விட்டேன் என சத்தம் போட்டுள்ளார்.
இதனை கேட்ட ஊர் மக்கள் திடுக்கிட்டு எழுந்து கூட்டமாக ஓடி வந்து பார்த்தபோது தமிழ்ச்செல்வி இறந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். உடன்பிறந்த தங்கையை, அக்கா வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.