வடபழனி முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடத்தி வைத்தார்.
முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளியான நித்தியானந்தம்- வசந்தி, அண்ணாமலை- ராதா ஆகிய இரு ஜோடிகளுக்கும் இந்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இலவசத் திருமணம் செய்து அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளார்.
பின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, சட்டமன்ற மானிய கோரிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று கூறியதன் படி இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சிதம்பரம் கோவில் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி இணை கமிஷனர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணை அறிக்கை பெற்றதும் இப்பிரச்சினை குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் தேர்த்திருவிழாவில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாளில் தொடங்கப்பட்ட ஒரு லட்சம் மரங்கள் நடும் பணியில் 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வடபழனி முருகன் கோவில் இணை கமிஷனர் ரேணுகா தேவி உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.