போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கிய நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தியது.
சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வருபவர் நடராஜன். இவரது அலுவலகம் சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ளது. இவர் தனது அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்காக உதவியாளர்களிடம் ரூ. 5 லட்சம் வீதம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை சுமார் 4 மணி நேரமாக நடந்தது.இந்த சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 35 லட்சம் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 30 உதவியாளர்களிடமிருந்து தலா 5 லட்சம் வீதம் நடராஜன் லஞ்சமாக பெற்றதும் தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து நடராஜனிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்து கொண்டிருந்த போது, போக்குவரத்து ஊழியர்கள் வெளியே பட்டாசு வெடித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கிய நிகழ்வு நடைபெற்றது. இது சற்று வேடிக்கையாக இருந்தாலும்கூட, ஊழியர்களே இப்படி செய்தது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை ஆணையர் நடராஜன் மீது வழக்குபதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.