பயங்கர தீ விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியில் ஷேக்தாவூத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்து நடத்தியுள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி மற்றும் வானவேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்தாவூத் இறந்ததார். இதன்பிறகு ஷேக்தாவூத்தின் மகன்கள் பட்டாசு குடோனை நடத்தி வந்துள்ளனர். இந்த குடோனின் உரிமம் கடந்த 2019-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. இந்த உரிமம் முடிவடைந்ததால் ஷபியுல்லா மற்றும் இஸ்மாயில் அரசிடம் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் இந்த பட்டாசு குடோனில் சரியான பாதுகாப்பு வசதி மற்றும் பாதை வசதி இல்லாததால் அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. இவர்கள் அரசின் உத்தரவை மீறி இந்த குடோனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஏழுமலை என்பவர் குடோனை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏழுமலை உடல் சிதறி உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் குடோன் முழுவதும் தரைமட்டமாக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஏழுமலையின் சிதறிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஷபியுல்லா மற்றும் இஸ்மாயில் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.