தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அத்துடன் படித்து முடித்த இளைஞர்களும் வேலை இன்றி தவித்து வந்தனர். கடந்த வருடம் இறுதியில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப் பட்டு பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு குறித்து அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போன்ற தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்து அதற்கான வேலைகளையும் செய்து வருகிறது.
அதன்பின் குரூப் 4 தேர்வுக்கான தேதியையும் தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவ்வாறு வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு அரசின் சார்பாக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தினாலும், தனியார் துறையும் தனது பங்கிற்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் வரும் மார்ச் 19 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இம்முகாமை திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்த இருக்கிறது. இந்தமுகாம் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9- பிற்பகல் 3 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க தேவையான தகுதிகளாக 8 ஆம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற தகுதிகள் ஆகும். அத்துடன் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலை தேடுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயோ-டேட்டா, அனைத்து கல்வி சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வேலை தேடுபவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.