ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் குறைந்த கொரோனா 3 வது அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு வருகிற 18ஆம் தேதியன்று 82வது பங்குனி உத்திர திருவிழா நடைபெற இருக்கிறது. மேலும் இங்குள்ள கொடிக்கம்பத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியுள்ளது. இதனையடுத்து முருகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
அதனால் பக்தர்களின் நலன்கருதி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வருகிற 18-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த ஆண்டு வெகு விமர்சையாக பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப் பட்டிருக்கிறது.