மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர். அப்போது கணவருடன் மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நொனைவாடி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. இதனையடுத்து சரஸ்வதி தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை எழுதி தந்து சகோதரன் ஏமாற்றி எழுதி வாங்கி விட்டதாக கூறினார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக தீக்குளிக்க முயன்றதாக சரஸ்வதி கூறியுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சரஸ்வதியிடம் கூறினார்கள். இருப்பினும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்றதற்காக சரஸ்வதி மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.