இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து மிகக்குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு, அந்நாட்டின் பல முக்கிய நபர்களை நிலைகுலையச் செய்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பதிலடியாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தார்.
இதனால் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக அதிகரித்தது. ஒரு பீப்பாய் விலை 100 டாலராக இருந்து, 110 டாலராக அதிகரித்தது. இது இந்திய சந்தையிலும் கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து மிகவும் குறைவான விலையில் கச்சா எண்ணெய் வாங்க தயாராகி கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கடுமையாக எதிர்த்த போதும், 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவின் எண்ணைய் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென் பசாகி, இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையை மீறும் செயல் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இது பற்றி மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை உலகநாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்பது தான் நாங்கள் வெளியிடும் அறிவிப்பு. இந்தியாவின் இந்த செயல் பொருளாதார தடையை மீறியது, என்று நான் கூறவில்லை. எனினும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவது, அந்நாட்டின் வரலாற்றை தவறான இடத்தில் நிறுத்தும் என்று கூறியிருக்கிறார்.