உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். தற்போது உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அவனியாபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் மந்தை முன்பாக அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் தற்போது காளைகள் உள்ளே வருவதற்கு ஏற்றவாறு தயார் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில் ஆறிலிருந்து ஏழு அணிகள் வரை விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் 100 வீரர்களும் 100 காளைகளும் இடம் பெறுவர்.
அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் சாலையில் வருகின்ற காளைகள் அனைத்தும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலுக்கு அனுப்பும் வகையில் காவலர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி சார்பாக காயமுறும் காளைகள் மற்றும் வீரர்களுக்குத் தேவையான மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் ஆகியன செய்யப்பட்டுள்ளன.