Categories
தேசிய செய்திகள்

“பதவியேற்பு விழா”…. 17-வது முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பகவந்த் மான்…. வெளியான தகவல்…..!!!!!

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியானது அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப்பில் நடந்து வந்த 10 வருட காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. முதல்-மந்திரி வேட்பாளராக பகவந்த் மானை, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அவரது நம்பிக்கையை பூர்த்திசெய்யும் அடிப்படையில் பகவந்த் மான் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமருகிறார்.

இவர் முன்பே பஞ்சாப்பிலுள்ள சங்ரூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். தற்போது முதல்- மந்திரியானதால் அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். இதையடுத்து பகவந்த்மான் முதல்- மந்திரியாக பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொள்ள பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து தொண்டர்கள் புறப்பட்டதால் அவர்களது வாகனங்களை நிறுத்த 50 ஏக்கர் பரப்பளவில் இடம் தனியாக தயார் செய்யப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழா காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த மாவட்டத்துக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக உயிர் துறந்த பகத்சிங் இறுதி நாளில் மஞ்சள்நிற தலைப்பாகை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை உணர்த்தும் அடிப்படையில் பதவியேற்பு விழாவிற்கு வரும் அனைவரும் மஞ்சள்நிற தலைப்பாகை அணிந்து வர வேண்டும் என்று பகவந்த் மான் கோரிக்கை விடுத்து இருந்தார். அதனை ஏற்று விழாவிற்கு வந்திருந்தவர்கள் மஞ்சள்நிற தலைப்பாகை அணிந்து வந்திருந்தனர்.

இதன் காரணமாக பகத்சிங் பிறந்த கிராமத்தில் இன்று எங்கு திரும்பினாலும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது. இன்று மதியம் 1 மணியளவில் நடைபெற்ற விழாவில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதல்- மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

இவ்விழாவில் பகவந்த் மான் மட்டுமே பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது என்பது தொடர்பாக ஆலோசித்து முடித்த பின் புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகவந்த் மான் சிங் பதவியேற்பு விழாவில் கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Categories

Tech |