கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனை தொடர்ந்து 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி தினமான இன்று (16-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ள 21.21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மார்ச் 25 ஆம் தேதி முதல் பள்ளிகளில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 70 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.