பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் மணிகண்டராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாசர்பட்டி அரசு பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி கல்வி அதிகாரிகள் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டராஜிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது வாட்ஸ்அப் பதிவுகளையும் ஆய்வு செய்ததில் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் மணிகண்டராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.