Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சிலையைக் கடத்தலில் ஈடுபட்ட குருக்கள் உள்பட இருவர் கைது..!

நாகப்பட்டினம் அருகே பஞ்சலோக அம்மன் சிலை உள்பட 9 சிலை கடத்திய இருவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்  கைதுசெய்துள்ளனர்.

நாகப்பட்டித்ததில் பஞ்சலோக அம்மன்  மற்றும் நடராஜர் சிலை விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்ட் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

குருக்கள் பைரவசுந்தரம்

குருக்கள் பைரவசுந்தரம்

இந்தத் தனிப்படையினர் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (41) என்ற ஓட்டுநரிடம் சிலையை வாங்குவதுபோல் தொலைபேசியில் பேசியுள்ளார்கள். அப்போது பழமையான பஞ்சலோக அம்மன் சிலை ரூ.90 லட்சத்துக்கும் நடராஜர் சிலை ரூ.30 லட்சத்துக்கும் விற்பனைக்கு இருப்பதாக செல்வம் கூறியுள்ளார்.

ஓட்டுநர் செல்வம்

ஓட்டுநர் செல்வம்

இதையடுத்து தனிப்படையினர் வேதாரண்யம் பேருந்து நிலையத்திற்கு செல்வத்தை வருமாறு கூறி அங்கு சென்றுள்ளனர். அங்கு வந்த செல்வத்திடம் விசாரித்தபோது, அகஸ்தியர் ஏரிக்கரை வில்வநாத விசாலாட்சி அம்மன் ஆலயத்தில் கோயில் குருக்களாகப் பணியாற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பைரவசுந்தரம் (64) என்பவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு பஞ்சலோக சிவகாமி சுந்தரி அம்மன் சிலை, 2 நடராஜர் சிலைகள், வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் சிலை உள்பட 9 சிலைகளைப் பார்த்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், இருவரையும் கையும்களவுமாகப் பிடித்து அவர்களிடம் இருந்து சிலைகளை மீட்டனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோயில் குருக்கள் பைரவசுந்தரம், செல்வம் ஆகியோரை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சிலைகளை வாங்க பேரம் பேசி சென்ற முக்கியப் பிரமுகர்கள் குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

 

Categories

Tech |