சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட ஓரிரு நாளில் என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திமுக அரசு மீது வைத்து குற்றச்சாட்டுகளில் ஒன்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பது தான். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக பாஜக நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சி மீது எந்தவிதமான புகார் வந்தாலும் அது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துவரும் ஸ்டாலின் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி வருகிறார். காவல்துறையிலும் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த வாரம் புதிதாக நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி பெற்றனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்குபெற்ற 3 நாள் மாநாடு நடைபெற்றது.
அதில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் குற்றங்களோட விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அமைதியான மாவட்டங்களில்தான்- அதிகமான நிறுவனங்கள், தொழில்கள் தொடங்க முன்வருவார்கள்” என்று பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
முதல்வரின் பேச்சு காவல்துறை அதிகாரிகளின் செயல்பாட்டில் வேகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் குற்றச் செயல்களில் தொடர்புடைய ரவுடிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் பணிகள் தீவிரமாகியுள்ளன. இந்த சூழலில் தான் நாங்குநேரி என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவி மேட்டை சேர்ந்தவர் முருகன் என்ற நீராவி முருகன். இவர்மேல் தமிழகம் முழுவதும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் உள்ள கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் தனிப்படையினர் இவரை தேடி வந்த நிலையில் இன்று காலை நாங்குநேரி களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு பெட்ரோல் பங்க் அருகில் இவரை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்தனர். நீராவி முருகன் பிடிக்கச் சென்ற காவல்துறையினரை தாக்கி தப்ப முயன்றுள்ளார். இந்நிலையில் நீராவி முருகன் தனிப்படை பிரிவினரால்என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் போலீஸுக்கு தண்ணி காட்டும் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.