சென்னை மாநகராட்சி மேயர் பருவமழை தொடங்கும் முன் மழைநீர் வடிகால் பணிகளை முழுவதும் முடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்ற திமுக சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன்(28) தேர்வு செய்துள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி மேயராக பொறுப்பேற்ற பிறகு, அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் பிரியா ராஜன் எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார். மேலும் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கியுள்ளார்.
இதையடுத்து தொடக்கத்திலிருந்தே சென்னை மழை நீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி வந்த மேயர் பிரியா ராஜன், தற்போது பருவமழை தொடங்குவதற்கு முன்பே அந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தகாரரிடம் மிகவும் கறாராக தெரிவித்துள்ளார். சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்க ரூபாய் 176.94 கோடி மதிப்பீட்டில் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள 2021- 22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 500 கோடியானது சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அப்போது உடனடியாக களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நீரை அப்புறப்படுத்தி, மீட்பு நிவாரணம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார். அவ்வாறு அரசின் உடனடி நடவடிக்கையால் ஒரு வாரத்தில் இயல்புநிலைக்கு திரும்பியதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்த பணிகளை முன்கூட்டியே முடிப்பதற்கான செயல்பாடுகளை மேயர் பிரியாராஜன் மேற்கொண்ட நிலையையும் அவரது அதிரடி பேச்சையும் அங்கிருந்த மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஏனென்றால் இளம் வயது கொண்ட இவர் என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்தவர்களுக்கு அவரது அதிரடி நடவடிக்கை மூலம் பிரியா ராஜன் பதில் அளிக்கப் போகிறார் என திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.