இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) ஒரு சட்டரீதியான காப்பீடு மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். இது இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் உரிமையின் கீழ் இயங்கி வருகிறது. பொதுவாக ஆயுள் காப்பீடுகளை எடுத்து அதன் முதிர்வுக்காலம் வரைக்கும் அத்தொகையை முழுமையாக செலுத்தும் மக்கள் மிக குறைவான எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர். அதேபோன்று பாலிசியை சரியாக செலுத்தியவர்களும் அதற்கான முதிர்வுத் தொகையை கிளைம் செய்வதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
இவ்வாறு முதிர்வுத்தொகை பெறாமல் LIC நிறுவனத்திடம் மட்டும் ரூபாய் 21,000 கோடிக்கு மேல் பணம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து LIC வெளியிட்டு உள்ள அறிக்கையில் “கடந்த 2021 செப்டம்பர் மாதம் நிலவரம் அடிப்படையில் கிளைம் செய்யப்படாத மொத்த தொகையின் மதிப்பு ரூபாய் 21,539.5 கோடியாக இருக்கிறது. அதேபோன்று இந்த எண்ணிக்கை 2021 மார்ச்சில் ரூபாய் 18,495.3 கோடியாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பாலிசிகள் முதிர்வடைந்தும் அதை கிளைம் செய்யாததால் இந்த மொத்த தொகையும் LIC நிறுவனத்தில் மட்டுமே இருக்கிறது.
இத்தொகையில் செட்டில்மென்ட் முடிந்து பாலிசிதாரருக்கு செலுத்தாத தொகை, முதிர்வு காலம் முடிந்தும் கோரப்படாத தொகை, கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை, திருப்பி வழங்க வேண்டிய தொகை என்று அனைத்தும் உள்ளடங்கி உள்ளது. தற்போது கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூபாய் 4,346 கோடி கோரப்படாத தொகையாகவும், கிளைம் செய்து செட்டில் செய்த தொகை ரூபாய் 1,527.6 கோடியாகவும் இருக்கிறது. இவ்வாறு கிளைம் செய்யாமல் உள்ள பாலிசி தொகை 10 வருடங்கள் கழித்து மூத்தகுடிமக்களுக்கான நலத்திட்ட நிதிக்கு மாற்றப்படும் என்பதை பாலிசிதாரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். இப்போது பாலிசிதாரர் கோரப்படாத தொகைகளை பெறுவதற்கு LIC இணையதளத்தில் தனது பெயர், பிறந்த தேதி, பாலிசி எண் போன்றவற்றை உள்ளிட்டு விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.