தமிழகத்தில் கொரோனா தொற்றுகாரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா குறைந்து வந்ததால் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் 3-வது அலையின் தாக்கம் அதிவேகமாக பரவ தொடங்கியது.
அதன்பின் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பொது தேர்வுகளை நடத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு 2 செட் வினாத்தாள் தயாரிக்பட்டுள்ளதாகவும், தேர்வு நாளில் தான் இதிலிருந்து ஒரு செட் வினாத்தாள் தேர்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.