தமிழக ரேஷன் கடைகளுக்கு சேமிப்பு கிடங்குகளில் இருந்து உணவுப் பொருள்கள் எடை குறைவாக சப்ளை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதனால் இழப்பை சரிகட்ட கடை ஊழியர்கள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு எடை குறைத்து பொருள்களை வழங்குகின்றனர். இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணைப்பதிவாளர் களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எடை குறைவாக ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக அவ்வப்போது தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
அதனால் மண்டலங்களில் பொருட்களை சப்ளை செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும், எடை சரி பார்க்க கூடிய மின்னணு தராசுகள் இருக்க வேண்டும். அதனைப்போலவே ரேஷன் கடைகளில் பொருட்களை இறக்கும்போதும் மறு எடையிட்டு ரேஷன் ஊழியர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது விநியோகத் திட்ட பணியை எவ்வித புகாரும் இடமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.