உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. அதன்படி ஒருபக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கத்தில் கொடூர தாக்குதல் என்பது ரஷ்யாவின் யுக்தியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 22-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வருகிற ரஷ்யபடைகள் தலைநகர் கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இப்போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. எனினும் பேர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைளை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேசநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளோம் எனவும் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ரஷ்யா உடனே இணங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அத்துடன் இந்த உத்தரவை புறக்கணித்து விட்டால் ரஷ்யா தனிமைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.