நம்பியூர் அருகே அளவுக்கதிகமாக மது அருந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகிலுள்ள குருமந்தூர் அலங்கியம் பகுதியில் வசித்து வந்தவர்கள் 51 வயதான சுப்பன் மற்றும் 46 வயதான செல்லான். நண்பர்களான இவர்கள் 2 பேரும் விவசாயம் கூலிவேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரண்டு பேர்களும் சேர்ந்து கோவிலுக்கு அருகில் அமர்ந்து அளவுக்கதிகமாக மது அருந்தியுள்ளார்கள்.
இதனால் இரண்டு பேரும் தலைசுற்றி மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பனும், செல்லானும் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதுகுறித்து நம்பியூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.