சீர்காழியில் சாமி சிலைகளை கடத்திய கோவில் அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 உலோக சிலையை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள மன்னன் கோயில் கிராமத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இருந்த நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலை ஈஸ்வரர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 உலோக சாமி சிலைகள் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுகுறித்து ஏனாகுடி பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
இப்புகாரின் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் ஐஜி தினகரன் உத்தரவின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், பாலச்சந்திரன் சின்னதுரை உட்பட காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் காணாமல் போன சிலை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இவ்விசாரனையில் சீர்காழி அருகிலுள்ள நெம்மேலி கிராமத்தில் வசித்து வரும் கோவில் அர்ச்சகர் 75 வயதான சூரியமூர்த்தி என்பவரை விசாரணை மேற்கொண்டபோது அவர் சிலை மறைத்து வைத்த இடத்தை தெரிவித்தார். அவர் சொன்னதுபோல அதே பகுதியில் உள்ள விசாலட்சுமி உடனாகிய விசுவநாத சாமி கோவிலில் இருக்கும் விசாலாட்சி அம்மன் கருவறை மண்டபத்தில் சாமி சிலைக்கு பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி ஆகிய இரண்டு உலோக சாமி சிலைகள் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சூரியமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் உலோக சாமி சிலைகளை காவல்துறையினர் கைப்பற்றி விட்டு மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி இல்லாமல் அவருடைய வீட்டில் மறைத்து வைத்திருந்த காத்தாயி அம்மன் வெள்ளி கவசம், சனீஸ்வரன் வெள்ளிக்கவசம், 2 வெள்ளி குத்து விளக்குகள், வெள்ளி குடம் எல்லாவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மதிப்பு ரூபாய் 2 கோடி இருக்கும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து கும்பகோணம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்களுடன் சூரியமூர்த்தியை போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி மகாராஜா குருக்கள் சூரியமூர்த்தியை வருகின்ற 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.