இறைச்சி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லட்சுமண புரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் மின் கம்பத்தின் அருகில் உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் குளத்தூரில் வசித்த பாலமுருகன் என்பது தெரியவந்துள்ளது.
இவர் அப்பகுதியில் இறைச்சிக்கடை மற்றும் இரவு நேர துரித உணவு கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பத்மினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. மேலும் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் மின் கம்பத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.