நாட்டு வெடிகுண்டை கடித்து காயமடைந்த பசுமாடு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் பகுதியில் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான பசு மாடு நாட்டு வெடிகுண்டை கடித்துவிட்டது. இதனால் பசுமாட்டின் வாய் சிதைந்து உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் மதன்குமார் பசுமாட்டை நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பசுமாட்டை பரிசோதித்த மருத்துவர்கள் அதனை குணப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டுவர இயலாது என தெரிவித்துள்ளனர். இதனால் சில மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பசு மாடு அதிகாலை திடீரென உயிரிழந்தது. தாய்ப்பசு இறந்தது தெரியாமல், கன்று குட்டி பால் குடிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த பசுமாடு தோட்டத்தில் ஒரு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.