தீக்குளித்த வாலிபரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் சரக்கு வேன் டிரைவரான சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் சரக்கு வேனில் சென்று கொண்டிருந்த போது அந்த இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் .சந்தோஷ்குமார் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து சந்தோஷ் குமார் மதுபோதையில் இருப்பதாக கூறி காவல்துறையினர் சரக்கு வேனை பறிமுதல் செய்து அவருக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இதனை நினைத்து மன வேதனையில் இருந்த சந்தோஷ் குமார் நடுரோட்டில் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தோஷ் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை சந்தோஷ் குமாரின் தாயார் புஷ்பம் மற்றும் அவரது உறவினர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சந்தோஷ் குமாரின் சடலத்தை வாங்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.