மாற்றுத்திறனாளியை தாக்கிய குற்றத்திற்காக 3 போலீஸ்காரர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கோட்டகுப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆவார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் கவரப்பட்டி பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என கூறியுள்ளார். இதுகுறித்து விராலிமலை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி பெண் காவலர் மாவட்ட காவல் நிர்வாகம் கொடுத்த கைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் சங்கரின் இருப்பிடத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து சங்கரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் காவலர்கள் செந்தில், பிரபு, அசோக் ஆகிய 3 பேரும் சேர்ந்து சங்கரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
இதனால் சங்கர் காவல்நிலையத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சங்கரை எழுப்பிய வீட்டிற்கு போகுமாறு கோரியுள்ளனர். அதன்பிறகு சங்கர் அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் சங்கர் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். அதன்பிறகு சங்கரின் தாயார் மாரியாயி மகனைத் தேடி காவல்துறைக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்தவர்கள் சங்கர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு சங்கரை தேடி மாரியாயி வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் சங்கர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியாயி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சங்கரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஐ.ஜியிடம் மாரியாயி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் செந்தில், பிரபு, அசோக் ஆகிய 3 பேரையும் ஐ.ஜி பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.