பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உருவாட்டி பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதன்பின்னர் பெரியநாயகி அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை 6 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பெரிய நாயகி அம்மனை தரிசனம் செய்துள்ளனர். அதன் பின்னர் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வாழைப்பழங்கள் மற்றும் தேரில் இருந்த பூக்கள் வழங்கப்பட்டது.