நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை சற்று ஓய்ந்து இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. எனினும் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய நிலைமையை ஆய்வு மேற்கொண்ட அரசு, கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் “மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது
இதன் காரணமாக நள்ளிரவு 12 மணி முதல் பொதுக்கூட்டங்களுடன் மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் ஹோலிகா தஹன் நிகழ்வுக்காக மார்ச் 17 ஆம் தேதி ஒருநாள் மட்டும் காலை 5 மணி வரை ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடை சமயத்தில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் மக்கள் எப்போதும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பணியிடங்களில் வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் உட்பட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதற்கு நிர்வாக அமைப்புகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பொறுப்பாவார்கள்” என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக மேற்கு வங்கத்தில் 2021 ஆம் வருடம் மே 16ஆம் தேதி விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் மார்ச் 15ஆம் தேதி வரை கடைசியாக நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.