வீட்டிலேயே வந்து ஆதார் கார்டு எடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாகும். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியமானதாகிறது. பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் எடுக்கும் வசதி தற்போது வந்துவிட்டது. ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எடுத்து வைத்து அதன் பிறகு மீண்டும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
இனி குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க ஆதார் சேவை மையத்துக்கு செல்ல வேண்டியதில்லை. இதற்கு தற்போது புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வீட்டில் இருந்தே அந்த வேலையை முடித்து விடலாம். தபால்காரர்கள் மூலமாக வீட்டுக்கே வந்து குழந்தைக்கு ஆதார் எடுக்கும் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. தபால் நிலையங்கள் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்ட கருவி வாயிலாக ஆதார் எடுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக தபால்காரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வீட்டிற்கே வந்து ஆதார் எடுக்கும் வசதி நாடு முழுவதும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு கட்டமாக தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு பெற்றோரின் ஆதார் கார்டு கொடுக்க வேண்டியது மிகவும் கட்டாயமாகும். குழந்தைக்கு ஆதார் எடுக்கும்போது இந்த சேவைக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அதனால் பொது மக்களிடையே இந்த திட்டம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.