உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு நாடுகளும் இந்த போரை நிறுத்துவதற்காக முன்னெடுத்த முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இனப்படுகொலையை நடத்தி வருவதாகவும், உடனடியாக போரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறையிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் சர்வதேச நீதிமன்றம், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை நடத்தி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவிற்கு அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவால் ரஷ்யா, உக்ரைன் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலை நிறுத்தலாம் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரஷ்யாவோ உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என்று கூறிவிட்டது. மேலும் ரஷ்யா சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவையும் நிராகரித்துவிட்டது