சொந்த மகனே தாய் தந்தையை சொத்து தகராறில் அரிவாளால் வெட்டி மனைவியையும் தாக்கியதால் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், பரப்பாடி அருகிலுள்ள காத்த நடப்பு பகுதியில் 70 வயதான நாகராஜன் மற்றும் 60 வயதுள்ள முத்துலட்சுமி என்ற அவரது மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதியருக்கு 1 மகளும் 2 மகன்களும் இருந்துள்ளனர் .
இவர்களது மூத்த மகன் 37 வயதான முத்துப்பாண்டி. இவருக்கு 36 வயதில் மோகனசுந்தரி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மேலும் முத்து பாண்டியின் தந்தை நாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். நாகராஜனின் மகன் முத்துப்பாண்டி வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றித் திரிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டி சொத்துகளை பிரித்து தர வேண்டுமென்று தந்தை நாகராஜனிடம்கேட்டுள்ளார் . அப்போது தந்தை நாகராஜன் வீட்டை முத்துப்பாண்டி பெயருக்கு எழுதியுள்ளார். மேலும் வீட்டை எழுதி வாங்கிய பின்னர் மகன் முத்துப்பாண்டி தாய் தந்தையை வீட்டை விட்டு விரட்டி உள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தந்தை நாகராஜன் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான வேறொரு இடத்தில் தங்கியுள்ளார் .
இந்நிலையில் நாகராஜன் தற்போது தங்கியிருக்கும் வீட்டையும் முத்துப்பாண்டி பெயருக்கு எழுதி வைக்கக் கோரி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றிவந்த முத்துப்பாண்டியை மனைவியும், தந்தை நாகராஜனும் கண்டித்துள்ளனர். இதனால் கோபமான முத்துபாண்டி, மனைவி நேற்று அதிகாலையில் தூங்கும்போது தலையில் கள்ளைத்துக்கி போட்டுள்ளார் .
இதிலும் ஆத்திரம் குறையாத முத்துப்பாண்டி பக்கத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தை நாகராஜன், தாய் முத்துலட்சுமி ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதைதொடர்ந்து அங்கிருந்து சென்ற முத்துப்பாண்டி விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி சரணடைந்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூன்று பேருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.