சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் பழமை வாய்ந்த அர்த்தநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த வருடம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவின்போது பிரகன்நாயகி அம்மாள் மற்றும் அர்த்தநாதீஸ்வரருக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு சுவாமி மற்றும் அம்பாள் பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். இந்த தேர் திருவிழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.