மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் மீன்பிடித் திருவிழா களை கட்டியது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் அய்யமுத்தான்பட்டியில் உள்ள பூலான்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. இந்த கண்மாய் அருகே கரை முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் இந்த சாமியை காவல் தெய்வமாக வழிபட்டு வருவார்கள். இந்த கண்மாயில் பொதுமக்கள் மீன்களை பிடிக்காமல் பாதுகாப்பாக வளர்த்து மீன்பிடித் திருவிழாவில் மீன்களை பிடிப்பார்கள்.
இந்த மீன்களை விற்பனை செய்வது தெய்வ குற்றம் என்று கருதி வீடுகளில் மீன்களை குழம்பு வைத்துச் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளனர். அதைப்போல இந்த ஆண்டும் பாரம்பரியத்தின்படி மீன்பிடிப் விழா சிறப்பாக நடைபெற்றது. சுற்றி இருக்கும் கிராம பகுதி மக்களுக்கு முன்கூட்டியே மீன் பிடிக்க போககின்ற நாள் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உறங்கான்பட்டி அழகிச்சிபட்டி, புதுப்பட்டி, கட்டாணிபட்டி, குப்பச்சிபட்டி, குறிச்சி பட்டி, கூலிப்பட்டி, கோட்டனத்தாம்பட்டி, மன்றமலைப்பட்டி, சருகுவலையபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் பூலான்குடி கண்மாய்க்கு வந்துள்ளனர். கச்சா வலை, ஊத்த கச்சா, பெரிய மீன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை வைத்து மீன் பிடிக்க பொதுமக்கள் முன்னேற்பாடாக இருந்தனர்.
அப்போது பாரம்பரிய வழக்கப்படி கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கரை முனியாண்டி சுவாமியை வழிபட்டு தங்கள் தலையில் கட்டியிருந்த வெள்ளை துண்டுகளை எடுத்து கொடி போல அசைத்து மீன் பிடிக்க விழாவை தொடங்கி வைத்தனர். அப்போது கண்மாயை சுற்றியிருந்த எல்லா மக்களும் தண்ணீருக்குள் பாய்ந்து மீனை பிடிக்க ஆரம்பித்தனர்.
தண்ணீரில் இருந்த மீன்கள் துள்ளி குதித்து ஓடினர். பொது மக்கள் அனைவரும் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். அயிரை, கெண்டை என பல்வேறு வகை நாட்டு மீன்களை பிடித்துள்ளனர். அதேபோல் பிடித்த மீன்களை கிராம மக்கள் சமைத்து சாமிக்கு படைத்து விட்டு பின் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் மீன்பிடி திருவிழா களைகட்டியது.