போதை மாத்திரை விற்பனை செய்த இளம்பெண் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள டிரஸ்ட்புரம் என்ற விளையாட்டு மைதானத்திற்கு அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் ஒன்று நேற்று தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜாவுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் வீராசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் அமைத்து, அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த அசோக் நகர் புதூரை சேர்ந்த கிஷோர் (வயது23), கேகே நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பை சேர்ந்த கிஷோர் குமார் ஆகிய இருவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் சோதனை செய்ததில் அவர்களது பையில் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் பேரில் கொத்தவால் சாவடி சேர்ந்த பூங்குன்றன் (வயது 26), கோகுல் (வயது24), பூந்தமல்லியை சேர்ந்த ராஜலட்சுமி (வயது22) மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 4 பேரும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள், 2 லேப்டாப் ஒரு ஐபேடு, 8 செல்போன்கள், மற்றும் 4 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.