சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்பிறகு தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமியின் மலைவல காட்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 8-ம் திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இதனையடுத்து முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. இந்த தேர்த்திருவிழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது வெற்றிவேல் மற்றும் வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர்.