வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுதெங்கென்விலை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் வெடிமருந்து தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி, வர்ஷா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜன் வெடிமருந்தை தன்னுடைய வீட்டில் இருக்கும் ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார். அப்போது ராஜனின் மகள் வர்ஷா அங்கு சென்ற போது திடீரென வெடி மருந்து வெடித்தது. இதில் வர்ஷா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ராஜமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் ராமலட்சுமி என்பவர் ராஜனுக்கு வெடி மருந்து கொடுத்து பட்டாசு தயாரிக்குமாறு கூறியுள்ளார். அதன்பிறகு ராமலட்சுமி மற்றும் ராஜன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது ராமலட்சுமி ஆறுதெங்கென்விலை பகுதியில் வசிக்கும் பலரிடம் வெடி மருந்து கொடுத்து பட்டாசு தயாரிக்குமாறு கூறியுள்ளார்.
அந்த தகவலின்படி ராஜமங்கலம் காவல்துறையினர், வருவாய் அலுவலர் கனி செல்வி, கிராம நிர்வாக அலுவலர் சிபு உள்ளிட்ட பல அதிகாரிகள் ஆறுதெங்கென்விலை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது மூதாட்டி ஒருவரின் வீட்டின் பின்புறம் 70 கிலோ வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை காவல்துறையினர் கைப்பற்றி வெடிகுண்டு ஆய்வு செய்யும் சிறப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில் ராமலட்சுமி மற்றும் அவருடைய சகோதரி தங்கம் ஆகிய 2 பேரும் சேர்ந்து வெடிமருந்து வினியோகம் செய்தது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.