அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல நாட்களாக சாலை வசதி, குடிநீர், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் தேவேந்திர குல மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் அருள்செல்வம் தலைமையில் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.