நாமக்கல்லில் உல்லாசம் அனுபவித்து, பணம் பறித்துவிட்டு காதலியை காதலனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த ஆண்டவலசு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஜோதிடர் ஆவார் இவரது மகள் வெள்ளையம்மாள். இவரது மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணமான 6 மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து வெள்ளையம்மாமாள் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் முத்து என்பவர் தொழில் ரீதியாக கந்தசாமியை சந்திக்க அவரது வீட்டிற்கு அடிக்கடி வருவார்.
அப்போது வெள்ளையம்மாளுக்கும் முத்துவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வெள்ளையம்மாளுடன் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் முத்து.
மேலும் தனக்கு பண உதவி தேவைப்படுவதாக முத்து கூற தன்னுடைய வருங்கால கணவர் என்ற எண்ணத்தில் நகையை அடமானம் வைத்தும், கூலி வேலை பார்த்தும், ஆங்காங்கே கடன் வாங்கியும் பணம் கொடுத்துள்ளார் வெள்ளையம்மாள். இதையடுத்து முத்துவிடம் தன்னை திருமணம் செய்து கொள் என்று வெள்ளையம்மாள் வற்புறுத்த இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து தன்னை ஏமாற்ற நினைத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார் வெள்ளையம்மாள். இதனால் வெள்ளையம்மாளை கொலை செய்ய திட்டமிட்ட முத்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி கடந்த 11ம் தேதி திருச்சி அருகே உள்ள துடையூருக்கு அழைத்துச் சென்றார். பின் அங்குள்ள ஆற்றங்கரை ஓரத்திற்கு கூட்டிச் சென்று பேசிக் கொண்டிருக்கையில் மீண்டும் வாக்குவாதம் இருவருக்கும் இடையே முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த முத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளையம்மாளை சரமாரியாக குத்தி கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் அவரை அங்கேயே புதைத்து விட்டு தப்பி ஓடி விட்டார் முத்து. வெளியே சென்ற மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த தந்தை கந்தசாமி திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்று காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நான்தான் வெள்ளையம்மாளை கொலை செய்தேன் என்று கூறி திருச்சி பாலமேடு தாசில்தார் அலுவலகத்தில் சரணடைந்தார் முத்து. இதையடுத்து வெள்ளையம்மாள் மாயமான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து முத்துவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.