நீலகிரி உதவி கலக்டெர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து உழவர் சந்தைக்கு செல்ல கூடிய பாதை மிகவும் குறுகலானது. இந்த பாதையின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், அப்பாதை வழியாகத்தான் தினமும் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்க்கு சென்று வருவார். அப்போது சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்டு ஆத்திரமடைந்த அவர் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தபடுவதை கட்டுப்படுத்துமாறு காவல்துறையினரிடம் பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் வாகனங்கள் நிறுத்தப்படுவது கட்டுப்படுத்தப்படவும் இல்லை. போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். . அப்போது அந்த பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உதவி கலெக்டர், வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தியபடி அருகே இருந்த புறக்காவல் நிலையத்திற்கு செல்ல, மேலும் போக்குவரத்து பாதிப்பு அதிகமானது.
காவல்நிலையத்திற்கு சென்ற உதவி கலக்டெர் அங்கே அமர்ந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அதில், இனி உழவர்சந்தை சாலையில் நெரிசல் ஏற்படாது என்று வாக்குறுதி அளிக்கப்பட பின் உதவி கலக்டெர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.