வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் வெளியேற உதவி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டில் நுழைந்த மூன்றாம் நாளில் அங்கு மாட்டிக் கொண்ட இந்திய மக்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலமாக, இந்திய மக்களுடன் சேர்த்து வேறு நாட்டினரும் மீட்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, ஆப்ரேஷன் கங்கா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் குடிமக்கள் பத்திரமாக நாடு திரும்பினர். இந்த மீட்பு நடவடிக்கைக்கு உக்ரைனின் பக்கத்து நாடுகளான ஹங்கேரி, போலந்து, ருமேனியா, சுலோவேக்கியா, மால்டோவா போன்ற நாடுகள் உதவிபுரிந்தன.
இந்திய மக்களுடன் சேர்ந்து, வங்காளதேசம், இலங்கை போன்ற பக்கத்து நாட்டு குடிமக்களும் மீட்கப்பட்டனர். எனவே, வங்காள தேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதில் உக்ரைன் நாட்டின் சுமி நகரத்தில் மாட்டிக்கொண்டிருந்த தங்கள் குடிமக்களை இந்திய மக்களுடன் சேர்த்து பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் உதவிக்கரம் நீட்டிய உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறேன். இரண்டு நாடுகளும் பல வருடங்களாக தனித்துவத்துடனும் நட்புறவுடன் இருப்பதற்கு, உங்களின் அரசாங்கம் முழுமனதாக ஒத்துழைப்பு வழங்கியது சான்றாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.