மகளிர் சுய உதவி குழுவின் கடன் தொகையை மோசடி செய்த முன்னாள் மேலாளர் உட்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2019 ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் மகளிர் சுய உதவி குழு மையங்களுக்கு சென்று உறுப்பினர்கள் பெற்ற கடன் விவரங்களை ஆய்வு செய்து பார்த்தபோது 37 உறுப்பினர்கள் கடன் பெறாமல் கடன் பெற்றதாக மோசடி செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து நிதி நிறுவனத்தை தணிக்கை செய்து பார்த்த போது மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 37 பேருக்கும் சேர வேண்டிய கடன் தொகையான ரூபாய் 14 லட்சத்து 14 ஆயிரத்து 864 பணத்தை முன்னாள் மேலாளர் சதீஷ், உதவி மேலாளர் நாகேஸ்வரி பிரியா ஆகியோர் மோசடி செய்ததது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் நிதி நிறுவன அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூபாய் 5 லட்சத்து 90 ஆயிரத்து 660 ரூபாய்யை நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 8 லட்சத்து 14 ஆயிரத்து 965 ரூபாயை திருப்பிக் கொடுப்பதாக கூறியும் திரும்ப செலுத்தவில்லை.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நிதி நிறுவனத்தினர் பொள்ளாச்சி ஜே.எம்1கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது, கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் மேலாளர் சதீஷ் உதவி மேலாளர் நாகேஸ்வரி பிரியா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.