பேஸ்புக் மூலம் பழகி பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்ற வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் 43 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் இந்த பெண் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த மீன் வியாபாரியான ஐயப்பன் என்பவருடன் இந்த பெண்ணிற்கு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஐயப்பனும் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் இரண்டு பேரும் தங்களது கருத்துக்களை பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் ஐயப்பனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது மகளுக்கு திருமணம் நடத்த உள்ளதாகவும், அதற்கு 5 லட்ச ரூபாய் கடனாக வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அப்போது உங்களை சந்தித்து பணம் தருகிறேன் என ஐயப்பன் கூறியுள்ளார். அதன்படி கடந்த 16-ஆம் தேதி ஐயப்பன் கோயம்புத்தூரில் வசிக்கும் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பணம் கொண்டு வந்துள்ளீர்களா என அந்த பெண் கேட்டதற்கு தனது நண்பர் உக்கடத்திலிருந்து இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவார் என ஐயப்பன் கூறியுள்ளார். இதனை அடுத்து ஐயப்பன் வீட்டில் இருந்த பூட்டை எடுத்து பெண்ணை திடீரென தாக்கியுள்ளார். அதன் பின் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு ஐயப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இடையர்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஐயப்பனை மடக்கிப்பிடித்து கைது செய்து அவரிடம் இருந்த நகையை மீட்டனர்.