குப்பை குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குமித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்படுகிறது. அதன்பிறகு இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் வலம்புரிவிளை பகுதியில் இருக்கும் குப்பைகளை மட்டும் தூய்மைப்படுத்தாமல் இருக்கின்றனர்.
இதன் காரணமாக அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இந்த தீ விபத்தால் ஏற்படும் புகைமூட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ வேகமாகப் பரவியதால் தக்கலை மற்றும் திங்கள்சந்தை பகுதியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள் தீயை அணைக்க பல மணி நேரமாக போராடினார்கள். இருப்பினும் தீ மளமளவென எரிந்து கொண்டே இருந்தது. இதன்காரணமாக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். மேலும் தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருப்பதால் சுற்றிலும் புகைமூட்டமாக காணப்படுகிறது.