கண்டக்டர் பேருந்தில் வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதியில் திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இந்த இளம்பெண் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கோயமுத்தூர் நோக்கி புறப்பட்டார். கடந்த 16-ஆம் தேதி இளம்பெண் திருவண்ணாமலையிலிருந்து அரசு பேருந்தில் சேலத்திற்கு வந்து அங்கிருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுள்ளார். இந்த பேருந்தில் பூவேந்திரன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்பு உள்ள இருக்கையில் அமர்ந்து பூவேந்திரன் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை இளம்பெண் கண்டித்தும் தொடர்ந்து அந்த நபர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வந்தவுடன் இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் டிரைவர் பேருந்தை நிறுத்திய உடன் சகபயணிகள் இளம்பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது கண்டக்டர் தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி இளம்பெண் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பூவேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.