தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு கடந்த மார்ச் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், அதற்கான நிதி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக-வினர் ஆட்சிக்கு வந்த பின் தாக்கல் செய்த முழு பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இந்த பட்ஜெட் தாக்கலில் அனைத்துதுறை சார்ந்த நிதி ஒதுக்கீடும் இடம்பெற்றது. அதாவது, உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்கு ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் மருத்துவத் துறைக்கு ரூபாய் 17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏமாற்றம் அளித்து இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அவர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்புகள் குறித்து பட்ஜெட் தாக்கலில் ஏதும் இடம்பெறவில்லை. இதையடுத்து இப்போது அரசுப் பள்ளிகளில் பகுதி நேரமாக பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நிரந்தரம் தொடர்பாகவும் ஏதும் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர். கடந்த 2012 ம் வருடம் ரூபாய் 5000 ஊதியத்தில் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர்.
அப்போது குறைந்த ஊதியத்தால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 50% பேர் பெண்கள் மற்றும் விதவை, மாற்றுத்திறனாளிகளும் இருக்கின்றனர். முதல்நாள் பட்ஜெட் கூட்டத்தொடரின் அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. இதனால் பகுதிநேரம் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு ரூ 300 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும். அவ்வாறு பணிநிரந்தரம் செய்தால் 12,000 குடும்பங்கள் வாழும். ஆகவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.