Categories
அரசியல் தேசிய செய்திகள்

பணவீக்கம் குறித்து மோடி பதிலளிக்க வேண்டும்- ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அடுத்த 30 நாள்களுக்குள் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மவுனம் காப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து அடுத்த 30 நாள்களுக்குள் சமையல் எண்ணெய், காய்கறிகளின் விலையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஒரு வரைபடத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் “சில்லறை பணவீக்கம் 2013ஆம் ஆண்டை விட எல்லா நேரத்திலும் உயர்ந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில், பணவீக்கம் ஒவ்வொரு மாதமும் வேகமாக உயர்ந்து வருகிறது, ஆனால் பிரதமர் அமைதியாக இருக்கிறார்,” என்று கூறினார்.

“ஜூலை 2019இல் பணவீக்கம் 3.15 விழுக்காடாக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில் 3.28, செப்டெம்பரில் 4.0, அக்டோபரில் 4.62, நவம்பரில் 5.54, டிசம்பரில் 7.35 விழுக்காடாக இருந்தது, தற்போது 8 விழுக்காட்டை தொட்டுள்ளது” என்றார்.

காய்கறி விலை 60 விழுக்காடு, பருப்பு வகைகளின் விலை 15.5 விழுக்காடு , உணவு மற்றும் பானங்கள் 12.5 விழுக்காடு , இறைச்சி மற்றும் மீன் 10 விழுக்காடு, மசாலா விலை 6 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்துள்ளது.

2014ஆம் ஆண்டு 8 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் தற்போது ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது . தக்காளி ஒரு கிலோ 39 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 29 ரூபாய்க்கும் , காலிஃபிளவர் கிலோ ஒன்றிற்கு 58 ரூபாயாக விற்பனையாகிறது.

எதிர்பாராத அளவிற்கு காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் பிரதமர் முற்றிலும் அமைதியாக இருக்கிறார். சமையல் எண்ணெய், காய்கறிகள், உணவு மற்றும் பானங்கள், பருப்பு வகைகள், மசாலாப் பொருள்கள் ஆகியவற்றின் விலைகளை பிரதமர் எவ்வாறு குறைக்க போகிறார் என எதிர்க்கட்சி தலைவர்களை கூட்டத்திற்கு அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |