மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தீயணைப்பு நிலைய அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தியமங்கலத்தில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரவீனா என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் குள்ளம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து சக்திவேல் தவறி சாக்கடை கால்வாயில் விழுந்துவிட்டார்.
இதனால் படுகாயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.